கல்லுவின் உலகம் 1 - கதையளக்கும் கல்லு! PDF

Document Details

TruthfulTransformation

Uploaded by TruthfulTransformation

2014

Subhadra Sen Gupta

Tags

children's story tamil story kids stories childrens literature

Summary

இது Tamil மொழியில் உள்ள ஒரு சுவாரஸ்யமான குழந்தைக்கதையாகும். கல்லு என்ற சிறுவனின் அன்றாட வாழ்க்கையையும், அவரது சவால்கள் மற்றும் அனுபவங்களைப் பற்றியும் கதை விவரிக்கிறது.

Full Transcript

## கல்லுவின் உலகம் 1 ### கதையளக்கும் கல்லு! **நிலை 4** **சுபத்ரா சென் குப்தா** **தபஸ் குஹா** **Original Story in English ‘Kallu's World — In Big Trouble Again!'** **by Subhadra Sen Gupta** **Illustrations: Tapas Guha** **'Kalluvin Ulagam — Kadaialakkum Kallu!'** **Tamil Translation by N. Chokkan*...

## கல்லுவின் உலகம் 1 ### கதையளக்கும் கல்லு! **நிலை 4** **சுபத்ரா சென் குப்தா** **தபஸ் குஹா** **Original Story in English ‘Kallu's World — In Big Trouble Again!'** **by Subhadra Sen Gupta** **Illustrations: Tapas Guha** **'Kalluvin Ulagam — Kadaialakkum Kallu!'** **Tamil Translation by N. Chokkan** **Pratham Books, 2011. Some rights reserved. CC-BY 4.0** **First Tamil Edition: 2014** **ISBN: 978-93-5022-244-7** **Typesetting and layout by:** **Pratham Books, Bengaluru** **Printed by:** **Rave India, New Delhi** **Published by:** **Pratham Books** **www.prathambooks.org** **Registered Office:** **PRATHAM BOOKS** **#621, 2nd Floor, 5th Main, OMBR Layout** **Banaswadi, Bangalore 560 043** **T: +91 80 42052574 / 41159009** **Regional Office:** **New Delhi** **T: +91 11 41042483** **Some rights reserved. The story text and the illustrations are CC-BY 4.0 licensed which means you can download this book, remix illustrations and even make a new story - all for free! To know more about this and the full terms of use and attribution visit http://prathambooks.org/cc.** ## கதையளக்கும் கல்லு! - ஷப்போ - கல்லு - முனியா - பத்ரி - மாஸ்டர்ஜி - தாமு - சாரு **கதை** **சுபத்ரா சென் குப்தா** **ஓவியங்கள்** **தபஸ் குஹா** **தமிழில்** **என். சொக்கன்** “கல்லு எழுந்திரு! நீ மறுபடி பள்ளிக்கூடத்துக்குத் தாமதமாப் போகப்போறே. கல்லூஊஊஊ°°!” அந்த அவசரக் குரல் கல்லுவை உலுக்கியபோது அவன் ஓர் இனிமையான கனவு கண்டுகொண்டிருந்தான். அந்தக் கனவில் அவனும் அவனுடைய தோழன் தாமுவும் ஆற்றில் ஒரு பெரிய மீனைப் பிடித்தார்கள். ஏனோ, அந்த மீன் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தது. கல்லு போர்வையை விலக்கிவிட்டுத் தூக்கக் கலக்கத்தோடு முறைத்தான், “ஷப்போ, என்னை ஏன் இவ்வளவு சீக்கிரமா எழுப்பறே? நான் சரியாத் தூங்கவே இல்லை!” “சீக்கிரமா?” அவனுடைய சகோதரன் ஷப்போ அழுத்தமான குரலில் சொன்னான். “கல்லு, சூரியன் உதிச்சு ரொம்ப நேரமாயிடுச்சு. அம்மா பால் கறந்துட்டாங்க. நாங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சுட்டோம்!” கல்லு நடுங்கியபடி எழுந்து உட்கார்ந்தான். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு முணுமுணுத்தான். “வெளிய சூரியனையே காணோமே!” “முட்டாளே, எங்க பார்த்தாலும் பனி படர்ந்திருக்கு. இப்போ சூரியன் எப்படித் தெரியும்?" என்றான் ஷப்போ. “அப்பா ஏற்கெனவே வயலுக்கு வேலை செய்யப் போயாச்சு, மத்த பசங்கல்லாம்கூட எப்பவோ ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க.” “எல்லாரும் போயிட்டாங்களா?” கல்லுவின் கொட்டாவி பாதியில் நின்றது. அவன் குரலில் கோபம் சேர்ந்துகொண்டது, ''முனியா? அவளும் போயிட்டாளா?” ஷப்போ மெல்லத் தலையசைத்தான். அவனுடைய முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது. "கடவுளே!” போர்வையை வீசி எறிந்துவிட்டுத் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றான் கல்லு. அவன் மறுபடியும் பள்ளிக்குத் தாமதமாகப் போகமுடியாது. போகக்கூடாது! இரண்டு நாள் முன்னால்தான் அவனுடைய வகுப்பு ஆசிரியர் கல்லுவை ரொம்ப மிரட்டியிருந்தார். “இன்னொருவாட்டி லேட்டா வந்தேன்னா, தண்டனை ரொம்பக் கடுமையா இருக்கும்!” வழக்கமாகக் கல்லு தாமதமாக வந்தால் காதைப் பிடித்தபடி மூலையில் மணிக்கணக்காக நிற்கவேண்டும். ஆனால் இந்தமுறை ஆசிரியர் கல்லுவை அடுத்த வகுப்புக்கு அனுப்பாமல் இங்கேயே நிறுத்திவைத்துவிடப்போவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். “நான் உடனடியா ஏதாவது ஒரு கதையைக் கண்டுபிடிக்கணும்” என்று யோசித்தபடி கட்டிலுக்குக் கீழே இருந்த தன்னுடைய செருப்புகளைத் தேடினான் கல்லு. “அதுவும் சாதாரணக் கதையெல்லாம் போதாது. பிரமாதமான, இதயத்தைத் தொடக்கூடிய, மாஸ்டர்ஜியை நம்பவைக்கக்கூடிய ஒரு கதை..." கல்லு பதற்றத்துடன் ஓடினான். எல்லா வேலைகளையும் அதிவேகத்தில் செய்து பள்ளிக்குத் தயாராக முயன்றான். அவன் எப்போதுமே இப்படிதான். ஒருநாள்கூட நிதானமாகத் தயாராகிக் கிளம்பியதே கிடையாது. ஜில்லென்ற தண்ணீரை பக்கெட்டிலிருந்து அவசரமாக முகத்தில் தெளித்துக்கொண்டான். அதன்மூலம் தூக்கத்தில் மூழ்கியிருந்த அவனுடைய கண்கள் லேசாகத் திறந்துகொண்டன. முழுசாகக் குளிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை. நல்லவேளையாக, அது குளிர்காலம். இல்லாவிட்டால் அவனுடைய அம்மா அவன் குளித்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருப்பார். கல்லு இப்போது தன்னுடைய உடைகளைத் தேட ஆரம்பித்தான். சட்டை எங்கே? பேன்ட் எங்கே? ஸ்வெட்டர் எங்கே? அவசரமாக எல்லாவற்றையும் அணிந்துகொண்டான். செருப்புகளில் கால்களை நுழைத்தான். தம்பி ஷப்போவைப் பார்த்தான். ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த அவனுடைய இடது காலில் பெரிய பிளாஸ்டர் கட்டு போடப்பட்டிருந்தது. “ஷப்போ, நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன்டா” என்றான் கல்லு. “இன்னும் ஒரு மாசத்துக்கு நீ ஸ்கூலுக்குப் போகவேண்டியதில்லை.” ''ஆமா.காலை உடைச்சுக்கறது ரொம்ப ஜாலி! இங்கேயே நாள்முழுக்க உட்கார்ந்துகிட்டு போரடிச்சுப்போய்க் கிடக்கிறது அதைவிட ஜாலி, நீயும் தாமுவும் ஃபுட்பால் விளையாடப் போறதைப் பார்த்து நான் தலைமுடியைப் பிச்சுக்கறது இன்னும் ஜாலி. ஜாலியோ ஜாலி!” ஷப்போ பேசி முடிப்பதற்குள் கல்லு வீட்டிலிருந்து வெளியேறிப் புல்வெளியில் பாதித் தொலைவு சென்றிருந்தான். ஷப்போ ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். கல்லுவின் உருவம் பனியில் சென்று மறையும்வரை காத்திருந்தான். அதன்பிறகு மெல்லச் சிரிக்க ஆரம்பித்தான். “அவன் போய்ட்டான்" என்று சத்தமாகக் கத்தினான் ஷப்போ. தன்னுடைய சகோதரியை அழைத்தான். “இனிமே நீ வெளியே வரலாம் முனியா!” அலமாரிக்குப் பின்னே ஒளிந்திருந்த முனியா வெளியே வந்தாள். அவள் முகத்திலும் இப்போது குறும்புப் புன்னகை. ஷப்போவைப் பார்த்தவுடன் அவள் இன்னும் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினாள். இருவரும் விழுந்து விழுந்து சிரித்ததில் முனியாவுக்கு விக்கலே எடுக்க ஆரம்பித்துவிட்டது! பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில் கல்லு ஒரே ஒரு வரட்டுச் சப்பாத்தியைமட்டும் கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான். இப்போது அதைக் கடித்தபடி அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். 'கல்லுப் பையா, அவசரமா ஒரு கதை வேணும், எல்லாரும் நம்பறமாதிரி ஒரு புதுக் கதையைக் கண்டுபிடிக்கணும். இல்லாட்டி நீ மறுபடியும் மூலையில நிக்கவேண்டியதுதான்!’ கல்லுவுக்குத் தன்னுடைய வாழ்க்கையே ஒரு பெரிய மர்மமாகத் தோன்றியது - அவன்மட்டும் ஏன் எப்போதும் பள்ளிக்குத் தாமதமாகவே செல்கிறான்? இத்தனைக்கும் கல்லுவுக்கு மிகவும் பள்ளிக்குச் செல்ல பிடித்திருந்தது. கணக்குப் போடுவது, அறிவியலைக் கற்றுக்கொள்வது, கால்பந்து விளையாடுவது, பள்ளி நிகழ்ச்சிகளில் பாடுவது என எல்லாவற்றையும் அவன் விரும்பினான், ரசித்தான், மகிழ்ச்சியோடு செய்தான். ஆனால் பள்ளிக்குச் சீக்கிரமாகப் போவதுமட்டும் அவனால் முடியவில்லை. ஏன்? மாஸ்டர்ஜி-க்கும் அதே குழப்பம்தான். சில நாள் முன்பாக அவர் அவனைச் செமத்தியாகக் கிண்டலடித்திருந்தார். “கல்லு, இனிமே ராத்திரியெல்லாம் நீ பள்ளிக்கூடத்திலேயே படுத்துத் தூங்கிக்கோ. அப்போதான் உன்னால சீக்கிரமா வகுப்புக்கு வரமுடியும்ன்னு நினைக்கறேன்!” அவர் இப்படிச் சொன்னதும் மற்ற பையன்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஆனால் இப்போது விஷயம் வெறும் சிரிப்பை மீறி இன்னும் பெரிதாகிவிட்டது. நிஜமாகவே மாஸ்டர்ஜி அவனை ஒன்பதாவது வகுப்புக்கு அனுப்பாமல் ஃபெயில் செய்துவிட்டால் கல்லுவுக்குப் பெரிய பிரச்னை காத்திருக்கிறது. அவனுடைய அப்பா அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார். அவரோடு வயலில் வேலை செய்யச் சொல்வார். நாள்முழுவதும் கீரையையும் கேரட்டையும் பட்டாணியையும் கவனித்துக்கொண்டிருப்பது ஒரு வாழ்க்கையா? அதைவிட பள்ளிக்குச் செல்வதைதான் கல்லு மிகவும் விரும்பினான். கல்லு இன்னும் நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டுப் படித்துப் பன்னிரண்டாம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டால் போதும். அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும். அல்லது, அவனால் கல்லூரிக்குச் செல்லமுடியும்! ஆஹா! கல்லூரிக்குப் போவது கல்லுவின் மிகப் பெரிய கனவு. அதை நினைத்தாலே அவனுக்குள் பரவசம் பொங்கியது. கல்லு எப்படியாவது பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துவிட விரும்பினான். அதன்பிறகு அவன் கணினி(கம்ப்யூட்டர்)களைப்பற்றிக் கற்றுக்கொள்வான். அதற்குத் தேவையான திறமை அவனுக்கு உண்டு. மாஸ்டர்ஜியே சொல்லியிருக்கிறார். போன வாரம் மாஸ்டர்ஜி கல்லுவின் வகுப்பு முழுவதையும் பக்கத்து ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கே பார்த்த விஷயங்கள் ஒவ்வொன்றும் அவர்களை மிகவும் கவர்ந்தன. அந்தக் கண்காட்சியில் இருந்த விற்பனையாளர் மவுஸை எப்படிப் பிடித்துக்கொள்வது, எப்படி இணைய (இன்டர்நெட்)த்துக்குள் செல்வது என்றெல்லாம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்தார். கல்லுவுக்கு எல்லாமே பெரிய மந்திரஜாலம்போலத் தோன்றியது. கல்லுவும் அவனுடைய தோழன் தாமுவும் மந்திரவாதிகளாக விரும்பினார்கள். கம்ப்யூட்டர் திரையில் குறுக்கும் நெடுக்கும் சென்று வித்தை புரிய நினைத்தார்கள். அந்தக் கண்காட்சியிலிருந்து வீடு திரும்பும் வழியில் பேருந்திலேயே கல்லுவும் தாமுவும் ஓர் அருமையான திட்டம் தயாரித்துவிட்டார்கள். “இப்பதான் நம்ம கஜூரியா கிராமத்துக்குப் பக்கத்தில ஒரு முக்கியமான நெடுஞ்சாலை வந்துடுச்சே. அங்கே நாம ஒரு ஹோட்டல் ஆரம்பிப்போம். அங்கேயே டெலிஃபோன் பூத், கம்ப்யூட்டர் சென்டர் எல்லாம் வெச்சுடுவோம்.” தாமுவுக்கு எப்போதும் சாப்பாட்டைப்பற்றிய கனவுகள்தான். ஆகவே அவன் அந்த ஹோட்டலை கவனித்துக்கொள்வான். தொலைபேசி பூத் கல்லுவின் பொறுப்பு. அந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வண்டி ஓட்டுனர்கள் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடுவார்கள். டெலிஃபோன் பூத்தில் தங்களுடைய வீட்டினரை அழைத்துப் பேசுவார்கள். அப்புறம் கம்ப்யூட்டர் சென்டர்? அதுதானே ரொம்ப முக்கியம்! அவர்களுடைய கிராமத்திலும் அக்கம்பக்கத்திலும் உள்ள விவசாயிகளெல்லாம் தங்களுடைய நெல், கோதுமை, காய்கறிகள், கரும்பு, மற்ற பயிர்கள் அனைத்தையும் என்ன விலைக்கு விற்கலாம் என்று கம்ப்யூட்டர்வழியே இன்டர்நெட்டில் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். 'தாமோதர் ஹோட்டல்,' 'கல்லன் கம்ப்யூட்டர் சென்டர்...' இந்தப் பெயர்களைக் கேட்டவுடன் தாமு சிரித்தான். கல்லுவைக் குறும்பாகப் பார்த்தான். “ஆனா கல்லு, இதுக்கெல்லாம் நீ முதல்ல ஸ்கூலுக்கு ஒழுங்கா நேரத்துக்குப் போகணுமே!” கல்லு சப்பாத்தியை மென்றபடி ஓடினான். ஒரு டீக்கடையைக் கடக்கும்போது உள்ளே பார்த்துச் சத்தமாகக் கத்தினான். “மாமா, சௌக்கியமா?” அந்த டீக்கடையின் முதலாளி பெயர் தரம்பால். அவர் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார். ஆச்சர்யமடைந்தார். “அட! நம்ம கல்லுவா இது?” அவருடைய புருவங்கள் உயர்ந்துகொண்டன, மெல்லச் சிரித்தார். “என்னாச்சு கல்லு? இன்னிக்குச் சூரியன் மேற்கே உதிச்சுடுச்சா? காலங்காத்தால இவ்ளோ சீக்கிரமா நீ எங்கே புறப்பட்டுட்டே?” “ஸ்கூஊஊஊஊஊஊல்!" “என்னப்பா அவசரம்? நம்ம கடையில கொஞ்சம் பக்கோடா சாப்டுட்டுப் போயேன்” என்றார் தரம்பால். அவருக்குப் பதில் சொல்லக் கல்லுவுக்கு நேரம் இல்லை. “இந்தத் தரம்பால் மாமாவுக்கு எப்பப்பார் கிண்டல்தான்" என்று தனக்குள் முணுமுணுத்தபடி ஓடினான். “நானே ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னு கவலைப்பட்டுகிட்டிருக்கேன். பக்கோடாவாம் பக்கோடா!” கல்லு பள்ளிக்குத் தாமதமாகச் செல்வது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. அடிக்கடி நடப்பதுதான். ஆனால் இரண்டு நாள் முன்னால்தான் அது பெரிய பிரச்னையாகிவிட்டது. அவர்களுடைய பள்ளியில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு விசேஷ நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அதற்காக ஓர் ஒத்திகையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அன்றைக்கும் கல்லு தாமதமாகத்தான் பள்ளிக்குச் சென்றான். அவன் வருவதற்குள் மற்ற மாணவர்கள் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' என்று தேசிய கீதத்தைப் பாடி முடித்துக்கொண்டிருந்தார்கள். தேசிய கீதம் பாடும்போது கல்லு, தாமு, முனியா, சாரு நால்வரும் முதல் வரிசையில் நிற்கவேண்டும் என்று மாஸ்டர்ஜி சொல்லியிருந்தார். ஆனால் இப்போது தாமதமாக வந்த கல்லு கடைசி வரிசையில்தான் நிற்கமுடிந்தது. எல்லோரோடும் சேர்ந்து 'ஜெய ஹே' சொல்லிவிட்டு அப்படியே நைசாக நழுவித் தப்பிக்க முயன்றான் அவன். ஆனால் அதற்குள் யாரோ அவனுடைய காலரைப் பிடித்துப் பின்னால் இழுத்தார்கள். கல்லுவின் இதயத்துடிப்பே நின்றுவிட்டது. நிமிர்ந்து பார்த்தான். மாஸ்டர்ஜியின் கோபமான முகம். “நீ மறுபடி லேட்டா வந்திருக்கே." ஆத்திரமாகக் கத்தினார் அவர். “உன்னை இந்த நிகழ்ச்சியிலிருந்து நீக்கிட்டோம்." “அச்சச்சோ! மாஸ்டர்ஜி என்னை மன்னிச்சுடுங்க” கல்லுவுக்கு அழுகையே வந்துவிட்டது. “தயவுசெஞ்சு என்னை நிகழ்ச்சியிலிருந்து நீக்கிடாதீங்க, ப்ளீஸ்!” வழக்கமாக கல்லு நினைத்த நேரத்தில் பொய்யாக அழக்கூடியவன்தான். ஆனால் இப்போது அவன் சிந்தும் கண்ணீர் நிஜமானது. அவன் எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினான். “மாஸ்டர்ஜி, ப்ளீஸ், ப்ளீஸ்!" என்று கெஞ்சினான். “நான் இனிமே லேட்டாவே வரமாட்டேன்!" 'சரி' மாஸ்டர்ஜியின் குரல் கொஞ்சம் தணிந்திருந்தது. “இந்தவாட்டி உன்னை மன்னிச்சு விட்டுடறேன். ஆனா இன்னொருதடவை நீ லேட்டா வந்தா, உடனடியா உன்னை வெளியே அனுப்பிடுவேன். புரிஞ்சதா?” கல்லு தலையாட்டினான். வகுப்புக்குள் நுழைய முயன்றான். “எங்கே போறே?” என்று அதட்டினார் மாஸ்டர்ஜி. "மூலையில போய் நில்லு. காதைப் பிடிச்சுக்கோ. அதுதான் உனக்கு தண்டனை!” அவன் வகுப்பில் இருந்த மற்ற பையன்கள் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் மாஸ்டர்ஜி தனது கடைசி ஆயுதத்தை வெளிக்காட்டினார். “கல்லன், நீ அடிக்கடி லேட்டா வர்றதால இந்த வருஷம் உன்னை ஃபெயில் பண்ணிடலாமான்னு யோசிக்கறேன்” என்றார் அவர். “இந்தப் பசங்கல்லாம் ஒன்பதாங்கிளாஸ் போவாங்க. நீமட்டும் இங்கேயே எட்டாங்கிளாஸ்ல இன்னொரு வருஷம் படிக்கணும். என்ன சொல்றே?” மாஸ்டர்ஜி அவ்வளவு தூரம் சொன்னபிறகும், இன்றைக்குக் கல்லு இன்னொருமுறை தாமதமாகப் பள்ளிக்குச் செல்கிறான். அவ்வளவுதான். அவனுடைய வாழ்க்கை முடிந்தது! 'ஒரு நல்ல கதை வேணும்' கவலையோடு யோசித்தான் கல்லு. 'மாஸ்டர்ஜி நிஜமாவே நம்பறமாதிரி ஒரு கதையைச் சொல்லணும்.' இதற்குமுன்னால் அவன் எத்தனையோ கதைகளைச் சொல்லியிருக்கிறான். ஆனால் இன்றைக்கு அவனுக்கு எதுவும் புதிதாகத் தோன்ற மறுத்தது. எதை யோசித்தாலும் சரியாகச் சொல்லவரவில்லை, குரல் தடுமாறியது, உடல் நடுங்கியது, மாஸ்டர்ஜியின் கோபமான முகமும், அவர் நம்பிக்கையில்லாமல் தலையாட்டும் காட்சியும் அவனுடைய மனத்திரையில் தோன்றியது. இதையே யோசித்துக்கொண்டு நடந்த கல்லு, ஓர் எருமைக் கூட்டத்தினுள் நுழைந்துவிட்டான்! 'ச்சே, இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை' என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தான் கல்லு. 'நான் என்னோட வாழ்க்கையைப்பத்திக் கவலைப்பட்டுகிட்டிருக்கேன். இந்த எருமைங்க வேற நடுவில வந்து கடுப்பேத்துது!' கல்லு கஷ்டப்பட்டு அந்த எருமைக் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தான். அங்கே பத்ரி நின்றிருந்தார். கல்லுவைப் பார்த்துச் சிரித்தார். பத்ரிதான் அந்தக் கொழுத்த எருமைகளை மேய்க்கிறவர். பெரிய தலைப்பாகை, கையில் குச்சி, புதர்மாதிரி மீசை. “என்ன கல்லு, இவ்ளோ சீக்கிரமா எங்கே கிளம்பிட்டே?" “ஸ்கூலுக்குதான்!” “அதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு” என்றார் பத்ரி. “நான் இந்த எருமைங்களையெல்லாம் குளிக்கவைக்கப்போறேன். நீ கொஞ்சம் உதவி பண்றியா?” “என்ன கிண்டலா?” முறைத்தான் கல்லு. “இல்லப்பா. நிஜமாதான் சொல்றேன். நீ எனக்கு உதவி செஞ்சேன்னா நான் அஞ்சு ரூபா தர்றேன். நீதான் இன்னிக்குச் சீக்கிரமாக் கிளம்பிட்டியே!” “ஆமா! ரொம்ப சீக்கிரமாக் கிளம்பிட்டேன்” எரிச்சலோடு முணுமுணுத்தான் கல்லு. “இன்னிக்கு ஸ்கூலுக்கு நான் நேத்திக்கே கிளம்பிட்டேன். நின்னு நிதானமா உன்னோட எருமைங்களைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டிட்டு அதுங்களோட டான்ஸ் ஆடிட்டுப் போறேன்! சந்தோஷமா?” 'ஹாஹாஹாஹா' வாய்விட்டுச் சிரித்தபடி ஓர் எருமையின் முதுகில் தட்டினார் பத்ரி. “கல்லு! நீ ரொம்பத் தமாஷாப் பேசறேப்பா!” கல்லு தொடர்ந்து ஓடினான். 'மொத்த கிராமமும் எனக்கு எதிரா இருக்கு. இந்த பத்ரிகூட என்னை கேலி பண்றான்.' 'ச்சே, இந்த மக்களுக்கு இரக்கமே கிடையாதா? என்னைமாதிரி ஓர் அப்பாவிப் பையனைக் கிண்டலடிச்சுத் தமாஷ் பண்ணக்கூடாதுன்னு இவங்களுக்குத் தோணாதா?' யோசித்தபடி மீண்டும் தன்னுடைய பழைய பிரச்னையினுள் நுழைந்தான் கல்லு. 'என்ன கதை சொல்லலாம்?' ''அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நான்தான் சமைச்சேன்-னு சொல்லலாமா?” ம்ஹூம். அந்தக் கதையை ஏற்கெனவே இரண்டுதடவை சொல்லியாகிவிட்டது. அதையே இன்னொருமுறை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். “ஆடு ஓடிப்போச்சு-ன்னு சொல்லிடலாமா?” ம்ஹூம். சென்றமுறை அவன் இந்தக் கதையைச் சொன்னபோது மாஸ்டர்ஜி ஏற்றுக்கொள்ளவில்லை. 'யாரோ என்னோட பேனாவைத் திருடிட்டாங்க-ன்னு சொல்லிடலாமா?’ ம்ஹூம். பேனாதான் அவனுடைய பள்ளிப் பையில் பத்திரமாக இருக்கிறதே. 'செருப்பு பிஞ்சுபோச்சு. தெச்சுகிட்டு வந்தேன்-னு சொல்லிடலாமா?' ம்ஹூம். அவனுடைய செருப்புகள் புத்தம்புதியவை. மாஸ்டர்ஜி நம்பமாட்டார். யோசித்தபடி தன்னுடைய சிநேகிதன் தாமுவின் வீட்டைக் கடந்து சென்றான் கல்லு. உள்ளே தாமுவும் அவனுடைய சகோதரி சாருவும் கட்டிலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். 'அட! இவங்களும் இன்னும் கிளம்பலியா?' கல்லுவின் முகத்தில் வெற்றிப் புன்னகை. அவர்கள் இன்னும் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்களும் தாமதமாக கல்லுவுக்குப்பிறகுதான் பள்ளிக்கு வருவார்கள். மாஸ்டர்ஜி அவர்களிடம் கோபமாகக் கத்தும்போது என்னை மறந்துவிடுவாரோ என்னவோ! தாமு நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “டேய் கல்லு, கொஞ்சம் இருடா! நானும் வர்றேன்!” “தோசை சாப்பிடறியா கல்லு?” என்று விசாரித்தாள் சாரு. "சூடான மசால் தோசை!” “ம்ஹூம். டைம் இல்லை” மூச்சிரைக்க ஓடினான் கல்லு. “ஸ்கூல்ல பார்க்கலாம்!” குழப்பத்தோடு கல்லுவைப் பார்த்தான் தாமு. தோள்களைக் குலுக்கிக்கொண்டான். தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். “தாமுவும் சாருவும் ரொம்ப அதிர்ஷ்டக்காரங்க" என்று நினைத்துக்கொண்டான் கல்லு. “அவங்க வீடு பள்ளிக்கூடத்திலேர்ந்து ரொம்பப் பக்கம். மணி அடிச்சப்புறம் கிளம்பி வந்தாக்கூடப் போதும்!” பள்ளிக் கதவை நெருங்க நெருங்க கல்லுவின் இதயம் இன்னும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அங்கே மாஸ்டர்ஜி வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் கல்லு அப்படியே நின்றுவிட்டான். பதற்றத்தோடு பேச ஆரம்பித்தான். “மாஸ்டர்ஜி, நான் லேட்டா வந்ததுக்காக என்னை மன்னிச்சுடுங்க. ஆனா இன்னிக்கு என்மேல எந்தத் தப்பும் இல்லை. என் தம்பி ஷப்போவுக்குக் கால் உடைஞ்சுடுச்சுன்னு உங்களுக்குத் தெரியும்தானே? அவன் குளிக்கறதுக்கு நான் உதவி செஞ்சேன். அதனாலதான் தாமதமாயிடுச்சு. அதுமட்டுமில்லாம ...” சட்டென்று பேச்சை நிறுத்தினான் கல்லு. காரணம், அவனை எப்போதும் பயமுறுத்துகிற மாஸ்டர்ஜி இப்போது நன்றாகச் சிரித்துக்கொண்டிருந்தார். “என்னப்பா? இன்னிக்கு எதுக்குப் புதுசா கதை சொல்றே?” “கதையா?” கல்லு அதிர்ச்சியடைவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டான். நடப்பது எல்லாமே அவனுக்கு விநோதமாக இருந்தது. “நான் எப்பவும் கதையெல்லாம் சொல்லறதில்லை சார். நான் சொல்றது அத்தனையும் நிஜம். என்னை நம்புங்க, ப்ளீஸ்!” “கல்லன், நீ கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் சீக்கிரமா வந்திருக்கே!" மாஸ்டர்ஜியின் முகத்தில் அதே புன்னகை. “சீக்கிரமாவா?” கல்லு அதிர்ச்சியில் உறைந்தான். “என்ன சார் சொல்றீங்க?” மாஸ்டர்ஜி தன்னுடைய கடிகாரத்தைக் காட்டினார். "பாரு! மணி 7:45தான் ஆகுது!" “முனியா இன்னும் வரலியா?” “யாருமே வரலை" மாஸ்டர்ஜி மறுபடி சிரித்தார். அவருடைய வாயிலிருந்து வெற்றிலை எச்சில் தெறித்தது. “உன்னைத்தவிர யாரும் வரலை!" கல்லு அதிர்ச்சியோடு புலம்பினான். “அப்படீன்னா, நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமா? ஒழுங்கா நிதானமாச் சாப்பிட்டுட்டுக் கிளம்பியிருக்கலாமா?” யோசித்தபோது அவனுக்கு விஷயம் புரிந்தது. “இதெல்லாம் அந்த ஷப்போவும் முனியாவும் செஞ்ச வேலை. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாத்திட்டாங்க!” “ஆமா. அவங்களால உன்னோட ஒரு நல்ல கதை வீணாகிப்போச்சு!' என்றார் மாஸ்டர்ஜி. “சரி, உள்ளே வா!" "நான் ஷப்போவவைச் சும்மா விடப்போறதில்லை." “என்ன செய்வே?” “அவனோட இன்னொரு காலை உடைச்சுடப்போறேன்” என்றான் கல்லு! ## கல்லுவின் உலகத்துக்கு உங்களை வரவேற்கிறோம்! இந்தக் கிராமத்தில் நல்லவர்களும் உண்டு. கெட்டவர்களும் உண்டு. கல்லுவும் அவனுடைய தோழர்களும் சுறுசுறுப்பான சுட்டிகள். கிராமத்து வழக்கங்களைக் கேள்வி கேட்பார்கள், வம்பு பண்ணுகிறவர்களுக்குப் பதிலடி கொடுப்பார்கள், பிரச்னைகளுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பார்கள். இந்தக் கதையில், நம் இளம் கதாநாயகன் கல்லு பள்ளிக்குத் தாமதமாகச் செல்கிறான். தன்னுடைய ஆசிரியரின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக ஒரு நல்ல கதையை உருவாக்கத் துடிக்கிறான். அப்புறம் என்ன ஆச்சு? உள்ளே படியுங்கள்! படிப்படியாகப் படிக்கக் கற்பது. இந்தப் புத்தகம் படிப்புநிலை 4 ஐச் சார்ந்தது. | படிக்கத் தொடங்குவது / உரக்கப் படிப்பது | படிக்கக் கற்பது |

Use Quizgecko on...
Browser
Browser